தலைமை ஆசிரியைக்கு கண்டனம் தெரிவித்து அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்


தலைமை ஆசிரியைக்கு கண்டனம் தெரிவித்து அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:30 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஈத்தாமொழி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கல்வி அதிகாரி நேரில் விசாரணை நடத்தினார்.

ஈத்தாமொழி,

ஈத்தாமொழி அருகே புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதூர், சுண்டபற்றிவிளை, பால் கிணற்றான்விளை, நெடுவிளை, மங்காவிளை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்த ராணிபாய் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஆண்டு தான் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணிக்கு வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். அப்போது மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் மதியம் தலைமை ஆசிரியையை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பெற்றோர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. கோட்ட இணை பொறுப்பாளர் கணேசன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் முத்து சரவணன், செயலாளர் ஜெகன், மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஜெகநாதன், துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் மாணவ-மாணவிகள் நெற்றியில் திருநீறு, சந்தனம், கைகளில் கயிறு போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்று தலைமை ஆசிரியை கூறியதாகவும், இதனை எங்களிடம் பிள்ளைகள் தெரிவித்ததாகவும் கூறினர். தலைமை ஆசிரியையின் இந்த செயலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.

இதுபற்றி ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவசிலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வி மாவட்ட அதிகாரி வந்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறினர்.

இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி தங்கராஜ், ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் பாஞ்சாலி, தர்மபுரம் தெற்கு கிராம அதிகாரி கிருஷ்ணகுமாரி ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்களிடம் பெற்றோர்கள் நடந்த சம்பவம் பற்றி கூறினார்கள். அதைத் தொடர்ந்து கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் மாணவ- மாணவிகளின் நலன் கருதி தான் கூறியதாகவும், மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் கூறவில்லை என்று அதிகாரியிடம் தலைமை ஆசிரியை விளக்கம் அளித்தார். மேலும், தனக்கு வேறு பள்ளிக்கு பணிமாற்றம் தருமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர், கல்வி அதிகாரி தலைமை ஆசிரியையின் விளக்கத்தை பெற்றோர்களிடம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மாலை 5.30 மணிக்கு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story