தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம்: மக்கள் ஊர்வலமாக சென்ற சாலையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மாதம் 22–ந் தேதி மக்கள் ஊர்வலமாக சென்ற சாலையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மாதம் 22–ந் தேதி மக்கள் ஊர்வலமாக சென்ற சாலையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
துப்பாக்கி சூடுதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மாதம் 22–ந் தேதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு கலவரம் ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த 5 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக ஆவணங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அதன்படி கடந்த 23–ந் தேதி முதல் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பகுதிகளில் தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அண்ணாநகரில் ஒரு வீட்டின் மாடி சுவரில் துளைத்து இருந்த 2 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ஏராளமான இரும்பு பொருட்கள் உள்ளிட்ட வழக்குக்கு தேவையான தடயங்களை சேகரித்து உள்ளனர். அதே போன்று தீவைத்து எரிக்கப்பட்ட மற்றும் சேதம் அடைந்த கார்களையும் ஆய்வு செய்தனர்.
4–வது நாள்நேற்று 4–வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. சென்னையை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் வாசுதேவன், பிள்ளை ஆகியோர் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல், அரசு ஆஸ்பத்திரி முன்பகுதியில் நேற்று மதியம் திடீரென சோதனை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கடந்த 22–ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற பாளையங்கோட்டை ரோட்டின் இரு பகுதியிலும் மெட்டல் டிடெக்டர், காந்தம் ஆகியவற்றை கொண்டு சோதனை நடத்தினர். அப்போது, துப்பாக்கி தோட்டாக்கள் ஏதேனும் கிடக்கிறதா, ரோட்டோரங்களில் மர்ம பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் சோதனை நடத்தினர்.
இதே போன்று இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா, மதுரை பைபாஸ் ரோடு, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மெயின் ரோட்டின் ஓரங்களிலும் சோதனை நடத்தினர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு தடயங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சேதம் அடைந்த வாகனங்களில் நேற்றும் சோதனை நடத்தினர்.