தேவாரம் பகுதியில் விவசாயிகளை கொன்ற காட்டுயானையை பிடிக்க அரசு தாமதம் செய்வது ஏன்? தங்கதமிழ்செல்வன் கண்டனம்
தேவாரம் பகுதியில் விவசாயிகளை கொன்ற காட்டுயானையை பிடிக்க அரசு தாமதம் செய்வது ஏன்? என்று தங்கதமிழ்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தமபாளையம்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் தேனி மாவட்ட செயலாளருமான தங்கதமிழ் செல்வன் நேற்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது:–
தேவாரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவு பருவமழை பெய்யவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரத்து இல்லை. இதன் காரணமாக விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரை வைத்து தென்னை, மரவள்ளிக்கிழங்கு, கரும்பு போன்றவற்றை விவசாயம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் காட்டுயானை புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதுவரை தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் 7 பேர் காட்டுயானை தாக்கி பலியாகி உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட இதே பகுதியில் பெரிய குருசாமி என்பவர் காட்டுயானை தாக்கி உயிர்தப்பினார். இப்படி சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் மக்கள் தினந்தோறும் உயிர் பயத்துடன் தோட்டங்களுக்கு சென்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிபட்ட நிலையில் யானையால் மீண்டும் உயிர்பலி ஏற்படாமல் இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும். ஆனால் நடவடிக்கை என்ற பெயரில் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் யானை வந்து செல்கிறது. இதனால் தேவாரம் பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். யானையால் பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் வனத்துறை உயர் அதிகாரிகள் இதுவரை சம்பவ இடங்களுக்கு வந்து ஆய்வு செய்யவிலலை என்று பொதுமக்கள் என்னிடம் கூறினார்கள். இங்கு நடைபெறும் சம்பவங்கள் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாதா?. ஒவ்வொரு மேடை மேடையாக ஏறி பேசுவரும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தெரியாதா?.
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு பாதிப்பு என்றால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வந்தார். ஆனால் இன்று அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்தி வரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறார். மக்கள் பாதிப்பு அடையாமல் காக்க, உடனடியாக நடவடிக்கை எடுப்பதில் ஏன் கால தாமதம் செய்கிறீர்கள்?.
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியவரை எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது. போர்க்கால நடவடிக்கையாக தமிழக அரசு தேவாரம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானையை உடனடியாக பிடித்து அதை பொதுமக்கள் விருப்பப்படி வெளிமாவட்டத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார்.
அப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டார்ரபீக், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வக்கீல் மணி, உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் அப்துல்காதர் ஜெய்லானி ஆகியோர் உடன் இருந்தனர்.