தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2018 4:00 AM IST (Updated: 28 Jun 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் அகற்றப்பட்டன.

தர்மபுரி,

தர்மபுரி நகரின் மையப்பகுதியில் புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்கள் அருகருகே அமைந்துள்ளன. இந்த பஸ்நிலையங்களுக்கு தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வதற்காகவும், பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லவும் டவுன் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் தர்மபுரி டவுன் பஸ்நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மற்றும் பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு வந்தன. இதேபோல் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைக்கான இடத்தை ஆக்கிரமித்து சிலர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதனால் பஸ்களை பிளாட்பாரத்தில் நிறுத்துவதிலும், பயணிகளை பஸ்களில் ஏற்றி இறக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தர்மபுரி டவுன் பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். இதன்படி நகராட்சி ஆணையாளர் கிருஷ்ண குமார் தலைமையில், நகர அமைப்பு அலுவலர் ஸ்ரீதர், நகர அமைப்பு ஆய்வாளர் திலகவதி, துப்புரவு அலுவலர் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சிறு கடைகள், பேனர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களையும் அங்கிருந்து அகற்றினார்கள். ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story