திண்டுக்கல்லில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.25 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தனியார் நிதி நிறுவன அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் (நியமனம்) நடராஜன் தலைமையில் அதிகாரிகள் செல்வம், சாந்தி ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த வீட்டில் திடீரென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பிரித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவற்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 28 பண்டல்களில் சுமார் 3 டன் புகையிலை பொருட்கள் அதில் இருந்தன.
இதன் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வீட்டின் உரிமையாளர் முத்துரத்தினவேல் (வயது 30) என்பதும், அவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்துவதை அறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடித்த பின்னர் தான், புகையிலை பொருட்களை எதற்காக வீட்டில் பதுக்கி வைத்தார்? எங்கிருந்து அவற்றை வாங்கினார்? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். முத்துரத்தினவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.