இரவு நேர விபத்துகளை தடுக்கும் வகையில் 4 வழிச்சாலையில் தானியங்கி சிக்னல்


இரவு நேர விபத்துகளை தடுக்கும் வகையில் 4 வழிச்சாலையில் தானியங்கி சிக்னல்
x
தினத்தந்தி 28 Jun 2018 4:26 AM IST (Updated: 28 Jun 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் காரைக்குடி 4 வழிச்சாலையில் பகுதியில் போலீசார் தானியங்கி சிக்னலை அமைத்துள்ளனர்.

காரைக்குடி,

ராமேசுவரத்தில் இருந்து காரைக்குடி வழியாக திருச்சி வரை தற்போது 4 வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் கட்டமாக திருமயம் முதல் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா வரை பணிகள் நிறைவு பெற்று மீதமுள்ள பணிகள் தற்போது முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. இதில் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர், மானகிரி, புதிய அரசு மருத்துவமனை, ஆவுடைப்பொய்கை, ஒ.சிறுவயல், வ.சூரக்குடி, நேமத்தான்பட்டி ஆகிய 7 பகுதிகள் காரைக்குடி வழியாக செல்லும் 4 வழிச்சாலையில் அமைந்துள்ளன.

இதில் கோவிலூர் அணுகு சாலை பகுதியில் விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறு,சிறு விபத்துக்கள் நடைபெற்று 15க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து இந்த விபத்தை தடுப்பது குறித்தும் ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த இணைப்பு சாலையில் தானியங்கி சிக்னல் அமைத்து அதன் மூலம் விபத்துக்களை தடுப்பதற்காக காரைக்குடி போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் முதல் கட்டமாக காரைக்குடி அருகே கோவிலூர் இணைப்பு பகுதியில் தனியார் ஜவுளிக்கடை பங்களிப்பில் ரூ.3லட்சம் செலவில் நான்குவழிச்சாலை 4முனைகளிலும் தானிங்கி சிக்னல்கள் அமைத்துள்ளனர். இது தவிர விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பு கம்பிகள்(பேரிகார்டு) அமைத்தும் அதன் மூலம் மிதமாக வேகத்தில் வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து காரைக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெத்தினம் கூறியதாவது:–

 காரைக்குடி அருகே உள்ள இந்த 4வழிச்சாலையில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமான உயிர்ப்பலி ஏற்பட்டது. இதையடுத்து இந்த விபத்தை தடுக்கும் வகையில் தற்சமயம் இந்த தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முதலாக ஈரோடு பகுதியில் அரசு சார்பில் இதுபோல் 5இடங்களில் இந்த தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தென் தமிழகத்தில் காரைக்குடியில் தான் இந்த சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி சிக்னல் 24மணி நேரமும் இயங்கும். இரவு நேரத்தில் இந்த சிக்னலில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் 4வழிச்சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் முகத்தில் படும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் தானாகவே இந்த சாலையில் செல்லும் டிரைவர்கள் தங்களது வாகனத்தில் வேகத்தை இந்த இடத்தில் குறைத்து செல்வார்கள். இதன் மூலம் இந்த பகுதியில் வாகன விபத்துக்களை தடுக்க முடியும். இதேபோல் பகல் நேரத்தில் அதிக வெளிச்சத்தில் எரியும் இந்த சிக்னலை தூரத்தில் இருந்து வாகனங்களை இயங்கும் டிரைவர்களுக்கு துல்லியமாகவும் தெரியும். இதன் மூலமும் டிரைவர்கள் தங்களது வாகனத்தை தானாகவே வேகத்தை குறைத்து செல்வார்கள். இது தவிர சாலையின் நடுவே ஒளிரும் ஸ்டிக்கர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது காரைக்குடி அழகப்பர் சிலை மற்றும் ஸ்ரீராம்நகர் ரெயில்வே கேட் பகுதியிலும் இந்த சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் சார்பில் நிதி உதவி செய்தால் மேலும் உள்ள 5இணைப்பு சாலைகளில் இந்த தானியங்கி சிக்னல் அமைக்கலாம். இதன் மூலம் இந்த பகுதியில் போக்குவரத்து விபத்துக்களை முற்றிலும் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story