தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை தொடங்கியது


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 29 Jun 2018 2:45 AM IST (Updated: 28 Jun 2018 7:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை நேற்று தொடங்கியது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 4 பேரும் இறந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று காலையில் விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணைக்காக துப்பாக்கி சூட்டில் பலியான காளியப்பன், கந்தையா, ஜெயராமன், செல்வசேகர் ஆகியோரின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் சம்பவம் தொடர்பாக தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதே போன்று காயம் அடைந்தவர்கள், அவர்களின் உறவினர்கள், பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை அவர்கள் பெற்றனர்.

ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறியதாவது:–

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந் தேதி நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் இறந்து உள்ளனர். அவர்களில் 4 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுகுறித்த தகவலின் பேரில், விரிவான விசாரணை செய்வதற்காக டெல்லியில் இருந்து தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் இங்கு வந்து உள்ளோம். இங்கு சம்பந்தப்பட்ட 4 பேரின் குடும்பங்களை அழைத்து விசாரணை செய்து உள்ளோம். நாளை (அதாவது இன்று) சம்பவத்தின் போது பணியில் இருந்த கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளோம்.

தற்போது இங்கு பணியில் உள்ள அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளோம். நாங்கள் விரிவான விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்போம். சம்பவம் நடந்த இடங்களையும் ஆய்வு செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story