பழுதடைந்த சாலைகளை செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பழுதடைந்த சாலைகளை செப்பனிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:15 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த சாலைகளை செப்பனிட வலியுறுத்தி தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு உயர்த்தப்பட்ட பல மடங்கு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பல மடங்கு வரி உயர்வை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்.

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தகுதியுள்ள அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும். அனைவருக்கும் சுகாதாரமான குடியிருப்பு வழங்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனே செப்பனிட வேண்டும். நாஞ்சிக்கோட்டை சாலையில் மழைநீர் தேங்காத வகையில் புதிதாக அமைத்து கொடுக்க வேண்டும்.

கட்டி முடிக்கப்பட்டு பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகங்களை தண்ணீர் வசதியுடன் திறக்க வேண்டும். பாதாள சாக்கடை உடைப்புகளை சரி செய்ய வேண்டும். சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து மின்விளக்குகளையும் எரிய விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாநகரக்குழு உறுப்பினர்கள் ராஜன், மனோகரன், சுந்தர், கோஸ்கனி, அப்துல்நசீர், வடிவேலன் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அனைவரும் மாநகராட்சி ஆணையர்(பொறுப்பு) காளிமுத்துவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story