கரூர் காங்கிரஸ் அலுவலகத்தில் பெட்டி-படுக்கையுடன் நிர்வாகிகள் குடியேறியதால் பரபரப்பு


கரூர் காங்கிரஸ் அலுவலகத்தில் பெட்டி-படுக்கையுடன் நிர்வாகிகள் குடியேறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jun 2018 4:15 AM IST (Updated: 29 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

பகுதி நேரமாக கட்சி பணி ஆற்றுவதாக குற்றம் சாட்டுவது சரிதானா? என்று கேள்வி எழுப்பி கரூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெட்டி, படுக்கையுடன் நிர்வாகிகள் சிலர் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் நகர காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கடந்த 25-ந்தேதி கரூரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் தற்போது பணியாற்ற பகுதி நேர அரசியல்வாதிகள் தேவையில்லை. முழுநேரமும் கட்சி பணியில் ஈடுபாடுடையவர்கள் தான் தேவை என்ற விதத்தில் பேசினார். இந்த கருத்துக்கு, கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட பொது செயலாளர் சுரேகாபாலசந்தர் தலைமையில் நகர பொருளாளர் தாந்தோன்றி குமார், நகர செயற்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், செந்தில்குமார், நகர செயலாளர் ரமேஷ், வட்டார துணை தலைவர் யுனிக்பாலசந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கரூர்- கோவை சாலையில் உள்ள வையாபுரிநகரில் ஒன்று கூடினர். அப்போது அவர்கள் தலையில் குல்லா அணிந்து, வெள்ளை சட்டை மற்றும் கழுத்தில் துண்டு சகிதமாக, நாங்கள் முழுநேரமும் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்ய தயாராக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க அங்கு குடியேறும் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று கூறி, அதற்கு தயாராகினர்.

பின்னர் அவர்கள் பெட்டி, படுக்கை, தலையணை உள்ளிட்டவற்றுடன் கரூர் வையாபுரிநகர் 2-வது கிராசில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி முழுநேர பணிக்கு வந்துவிட்டோம்... என கோஷமிட்டபடியே நடந்து வந்தனர். அப்போது அவர்களை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடிக்கப்பட்டது. இந்த சம்பவம் கரூர் காங்கிரசில் உள்கட்சி பூசல் உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருந்தது. இந்த நிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் அலுவலகத்திற்குள் அமர்ந்து இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி அலவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

குடியேறும் போராட்டம் நடத்த வந்த காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியின் அலுவலக அறை முன்பாக பாயை விரித்து காங்கிரஸ் கொடியை கையில் பிடித்து கொண்டு அமர்ந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியில் அனைவருமே முழு மூச்சுடன் தான் உழைத்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் கரூர் காங்கிரஸ் கட்சிப் பணி குறித்து தெரிவிக்க அதிகாரம் கொடுத்தவர் யார்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து மாவட்ட பொது செயலாளர் சுரேகா பாலசந்தர் நிருபர்களிடம் கூறுகையில், ராகுல்காந்தி பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது என தீவிர பணியில் தான் இருக்கிறோம். அப்படி இருக்கையில் குறை கூறுவது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான். அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சிலர் எங்களை பொறுப்பில் இல்லை எனவும் கூறுகின்றனர். கரூரில் 2 பேர் நகர தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தன்னிச்சையாக ஒருவரை மட்டுமே நகர தலைவர் என்று கூறுகின்றனர். தேர்தல் பொறுப்பாளராக சஞ்சய்தத் என்பவர் வந்திருந்த போது, ஒரு நகரத்திற்கு சவுந்தர்ராஜையும், மற்றொரு நகரத்திற்கு ஸ்டீபன்பாபுவையும் நியமிக்க சொல்லி கோரிக்கை கடிதம் கொடுத்தார். சமீபத்தில் கட்சிக்கு சம்பந்தமில்லாத சிலரை அழைத்து வந்திருக்கின்றனர். அமுதா சுப்ரமணியமும், கணேசனும் தொழில்அதிபர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், என்று கூறினார்.

பின்னர் சுரேகாபாலசந்தர் உள்ளிட்டோர் கட்சி அலு வலகத்தில் அமர்ந்திருந்த மாவட்ட தலைவர் சின்னசாமியை சந்தித்து, இந்த குற்றசாட்டு குறித்து விளக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சின்னசாமி தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர் மாவட்ட தவைர் சின்னசாமி நிருபர்களிடம் கூறுகையில், தற்போது வந்திருக்கிறவர்களுக்கு எங்களால் வேலை கொடுக்க முடியாது. அவர்கள் கட்சி பணி ஆற்றுவதும், சும்மா இருப்பதும், அவர்களுடைய சவுகரியம். தற்போது காழ்ப்புணர்ச்சியில் வந்திருப்பதாக நினைக்கிறேன். கட்சி அலுவலகத்திற்குள் அவர்கள் உட்கார்ந்திருந்தால் அப்படியே இருக்கட்டும். நான் உத்தரவு போட்டால் அவர்கள் கேட்பார்களா? என்று தெரியவில்லை, என்று தெரிவித்தார். கரூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் நிர்வாகிகள் சிலர் குடியேறும் போராட்டம் நடத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story