குடும்ப தகராறில் தம்பியை ஓட, ஓட விரட்டி குத்திக்கொன்ற தொழிலாளி கைது


குடும்ப தகராறில் தம்பியை ஓட, ஓட விரட்டி குத்திக்கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 29 Jun 2018 4:45 AM IST (Updated: 29 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே குடும்ப தகராறில் தம்பியை ஓட, ஓட விரட்டி குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 45). இவரது தம்பி கணேசன் (35). இவர்கள் இருவரும் அறந்தாங்கியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்தனர். இந்தநிலையில் அவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை வெள்ளைச்சாமி ஓட்டல் வேலைக்காக அறந்தாங்கிக்கு சென்றார்.

பின்னர் ஓட்டல் அருகில் உள்ள டீக்கடையில் வெள்ளைச்சாமி உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த கணேசனுக்கும், வெள்ளைச்சாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனை குத்த முயன்றார். அப்போது கணேசன் அவரிடம் இருந்து தப்பி தலைதெறிக்க சாலையில் வேகமாக ஓடினார். இருப்பினும் வெள்ளைச்சாமி, கணேசனை ஓட, ஓட விரட்டிச்சென்று தம்பி என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிந்து, வெள்ளைச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் தம்பியை, அண்ணனே குத்திக்கொன்ற சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story