ரூ.1¾ கோடி லஞ்சம்: 2 பெண் அதிகாரிகளுக்கு தலா 5 ஆண்டு ஜெயில்


ரூ.1¾ கோடி லஞ்சம்: 2 பெண் அதிகாரிகளுக்கு தலா 5 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:33 AM IST (Updated: 29 Jun 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான அதிபரிடம் ரூ.1¾ கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 பெண் அதிகாரிகளுக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மும்பை,

தானேயை சேர்ந்த கட்டுமான அதிபர் ஒருவரது நிறுவனத்தில் வருவாய்த்துறை கூடுதல் பெண் கமிஷனர் சுமித்ரா பானர்ஜி மற்றும் துணை கமிஷனர் அஞ்சலி பம்போலே ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் ரூ.25 கோடி வரையில் வருமானவரி செலுத்த வேண்டி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வருமான வரியில் இருந்து தப்பிக்க தங்களுக்கு ரூ.2 கோடி லஞ்சம் தருமாறு கூடுதல் கமிஷனர் சுமித்ரா பானர்ஜி மற்றும் துணை கமிஷனர் அஞ்சலி பம்போலே ஆகியோர் கட்டுமான அதிபருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதையடுத்து ரூ.1 கோடியே 70 லட்சம் லஞ்சம் கொடுக்க அவர் ஒப்புக்கொண்டார்.

பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத கட்டுமான அதிபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இந்தநிலையில் கூடுதல் கமிஷனர் சுமித்ரா பானர்ஜியின் கணவர், கட்டுமான அதிபரிடம் லஞ்சப்பணம் ரூ.1 கோடியே 70 லட்சத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் வருவாய்த்துறை கூடுதல் கமிஷனர் சுமித்ரா பானர்ஜி மற்றும் துணை கமிஷனர் அஞ்சலி பம்போலே ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விவேக் கத்தாரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட வருவாய்த்துறை கூடுதல் கமிஷனர் சுமித்ரா பானர்ஜி மற்றும் துணை கமிஷனர் அஞ்சலி பம்போலே ஆகியோருக்கு தலா 5 ஆண்டும், கூடுதல் கமிஷனர் சுமித்ரா பானர்ஜியின் கணவருக்கு 4 ஆண்டும் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் சுமித்ரா பானர்ஜி மற்றும் அவரது கணவருக்கு முறையே ரூ.80 லட்சம் மற்றும் ரூ.30 லட்சமும், அஞ்சலி பம்போலேக்கு ரூ.40 லட்சமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். 

Next Story