துப்பாக்கி சூடு சம்பவம்: தூத்துக்குடி முன்னாள் கலெக்டரிடம் 2 மணி நேரம் விசாரணை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் நடத்தினார்கள்


துப்பாக்கி சூடு சம்பவம்: தூத்துக்குடி முன்னாள் கலெக்டரிடம் 2 மணி நேரம் விசாரணை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் நடத்தினார்கள்
x
தினத்தந்தி 30 Jun 2018 3:30 AM IST (Updated: 29 Jun 2018 7:23 PM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி முன்னாள் கலெக்டர் வெங்கடேசிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

தூத்துக்குடி, 

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி முன்னாள் கலெக்டர் வெங்கடேசிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 4 பேரும் இறந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய துணைத்தலைவர் முருகன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

முன்னாள் கலெக்டரிடம் விசாரணை

நேற்று 2–வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது, முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் ஆணையம் முன்பு ஆஜர் ஆவதற்காக தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்துக்கு வந்தார். அவர் காலை 10.57 மணிக்கு விசாரணைக்காக ஆணையம் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் ஆணைய துணைத்தலைவர் முருகன் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணை மதியம் 1.08 மணி வரை நீடித்தது. முன்னாள் கலெக்டர் வெங்கடேசிடம் மொத்தம் 2 மணி நேரம் 11 நிமிடங்கள் தொடர்ச்சியாக விசாரணை நடந்தது. அப்போது அவர் அளித்த சாட்சியங்கள், ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன.

அதன்பிறகு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட துணை தாசில்தார்கள் கண்ணன், சேகர், கோட்ட கலால் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸ் ஐ.ஜி.

நேற்று மாலை தென்மண்டல முன்னாள் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், தூத்துக்குடி நகர முன்னாள் உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜர் ஆனார்கள். அவர்களிடமும் ஆணைய துணைத்தலைவர் விசாரணை நடத்தினார்.

இன்று (சனிக்கிழமை) தற்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உள்ளிட்ட அதிகாரிகளிடம் கலவரத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


Next Story