மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை கொடுத்த விவகாரம்: ‘‘ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
‘‘மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை கொடுத்த ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
திருச்செந்தூர்,
‘‘மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை கொடுத்த ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
சாமி தரிசனம்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய ரெயில்வே இணை மந்திரி மனோஜ் சின்ஹா ஆகியோர் நேற்று காலையில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோவில் விருந்தினர் மாளிகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விசாரணை கமிஷன்தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றபோது, அவருக்கு பெருமாளுக்கு சாத்தப்பட்ட மாலை மற்றும் அம்பாளுக்கு சாத்தப்பட்ட திருமஞ்சனம் வழங்கப்பட்டது. அவற்றை மு.க.ஸ்டாலின் அவமானப்படுத்தியது குறித்து, தமிழகத்தில் உள்ள எந்த கட்சியினரும் பேசவில்லை. இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். கோவிலில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மரியாதை கொடுத்த ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின், கோவிலுக்கு பரிகாரத்துக்கு சென்று விட்டு, தெய்வத்துக்கு பரிகாரம் செய்யும் நிலையை ஏற்படுத்தி உள்ளார். ஸ்ரீரங்கம் கோவில் முழுவதுக்கும் பரிகாரம் செய்வது நல்லது. இதுகுறித்து சட்டசபையில் சிறப்பு விவாதத்துக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மிகப்பெரிய கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த நிலை தொடர்வது தமிழகத்துக்கு நல்லது அல்ல.
வருத்தம் அளிக்கிறதுதமிழகத்தில் 8 வழி பசுமைச்சாலை அமைப்பது போன்று, பல மாநிலங்களிலும் அமைத்து வருகின்றனர். ஒரு பகுதியில் வளர்ச்சி வேண்டும் என்றால், அங்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு பகுதியில் சாலை அமைப்பதற்கு, அங்குள்ளவர்கள்தான் நிலத்தை வழங்க வேண்டும். மற்றொரு பகுதியில் உள்ளவர்கள் நிலத்தை வழங்க முடியாது. தேவையற்ற முறையில் எந்த நிலத்தையும் அரசு கையகப்படுத்தாது.
ஆனால் வளர்ச்சி பணிகளை தடுத்து, போராட்டத்தை தூண்டி, பூதாகரமாக்குவதற்காகவே சிலர் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. அவர்களுக்கு இந்த வளர்ச்சி திட்டத்தை பற்றியோ, இதனால் ஏற்படும் நன்மைகளை பற்றியோ, விவசாயத்தை பற்றியோ எதுவும் தெரியாது. அவர்கள் தமிழகத்துக்கு நன்மை தரக்கூடிய எந்த திட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்று செயல்படுகின்றனர்.
பயங்கரவாத செயல்கள்சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை. ஆனால் அதைப்பற்றி விவாதிக்காமல், அந்த பிரச்சினையை ஆற போடுவதற்காக, எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்து, தனியாக சென்று மாதிரி சட்டசபையை நடத்தினர். பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் பேச தயங்குகின்றனர். அவர்கள் பயங்கரவாதிகளின் கைக்கூலியாக மாறும் முயற்சியில் இருக்கிறார்களா?
தமிழகத்தில் பயங்கரவாத செயல்கள் நடப்பது தெரிந்தால், அதனை மத்திய அரசுக்கு தெரிவித்து, ஆட்சியை கவிழுங்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறுகிறார். அவரது நோக்கம், பயங்கரவாதத்தை அழிப்பதோ, அ.தி.மு.க.வை அழிப்பதோ அல்ல. அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்பதுதான். அவருக்கு இதைவிட வேறு எந்த கவலையும் இல்லை.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அப்போது, மதுரை கோட்ட ரெயில்வே பொது மேலாளர் நினு இட்டியாரா, கூடுதல் கோட்ட மேலாளர் ஷாவ், முதுநிலை கோட்ட மேலாளர் ஹரி கிருஷ்ணன், கோட்ட வர்த்தக மேலாளர் பரத்குமார், கோட்ட இயக்க மேலாளர் பிரேம்குமார், கோட்ட பொறியாளர் பிரபாகரன், தாசில்தார் தில்லைப்பாண்டி, பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நெல்லையம்மாள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.