மணல் கடத்தலை தடுக்கச்சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி, 2 பேர் கைது
மணல் கடத்தலை தடுக்கச்சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே கலிஞ்சிக்குப்பத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக வளவனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் கலிஞ்சிக்குப்பம் தென்பெண்ணையாற்றுக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 2 லாரிகளில் மணல் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்ய முயன்றனர்.
அந்த சமயத்தில் அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று சேர்ந்து, இன்ஸ்பெக்டர் லட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தனர்.
மேலும் அவரை உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் தாக்க முயன்றவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது 2 பேர் மட்டும் பிடிபட்டனர். மற்ற 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கலிஞ்சிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோ (வயது 25), விஜய் என்கிற அய்யனார் (26) என்பதும், தப்பி ஓடியவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த எழில் என்கிற எழில்ராஜ் (23), ஜெகன் (26) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இளங்கோ, விஜய் ஆகிய இருவரின் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய எழில், ஜெகன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.