புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ரூ.94.88 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு


புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ரூ.94.88 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 30 Jun 2018 5:00 AM IST (Updated: 30 Jun 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.94.88 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பிநாயக்கன்பட்டி, செல்லப்பம்பட்டி, எஸ்.உடுப்பம், நவனி, ஏ.கே.சமுத்திரம், பாய்ச்சல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.94.88 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள கிராம ஊராட்சி சேவை மையக்கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து செல்லப்பம்பட்டி ஊராட்சியில் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.4.49 லட்சம் மதிப்பீட்டில் ஆழ் துளைக்கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு வரும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் விஜயலட்சுமி ராஜ்குமார் என்பவரின் வீட்டை பார்வையிட்டார். அதைதொடர்ந்து பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் கொண்டம்மாள் ராமன் என்பரின் வீட்டையும் பார்வையிட்டார்.

இதேபோல எஸ்.உடுப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.24.32 லட்சம் மதிப்பீட்டில் செங்கோடம்பாளையம் முதல் செல்லப்பம்பட்டி சாலை வரை சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் பணியையும் பார்வையிட்டார்.

எஸ்.உடுப்பம் ஊராட்சியில் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு வரும் பணியினையும், நவனி ஊராட்சி வெள்ளால்பட்டி பகுதியில் செல்லம்மாள் ராமலிங்கம் என்பவர் தோட்டத்தில் கல்கரை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், ஏ.கே.சமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.77 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் பணி என புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.94.88 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்் பிரபாகரன், சரவணன், ஒன்றிய பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் நைனாமலைராஜ் உள்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story