கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது


கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 30 Jun 2018 12:09 AM GMT (Updated: 30 Jun 2018 12:09 AM GMT)

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று(சனிக்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது.

பெங்களூரு,

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை கர்நாடகம், தமிழகம் இடையே இருந்து நீண்ட காலமாக வருகிறது. இந்த பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இரு மாநிலங்களும் மேல்முறையீடு செய்தன. இதில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை சுப்ரீம் கோர்ட்டு குறைத்து தீர்ப்பு கூறியது. அதாவது தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீட்டு அளவு 192 டி.எம்.சி.யில்(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது. கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. கர்நாடகம் தனது பிரதிநிதிகளை அனுப்பாத நிலையில் மத்திய அரசு அந்த அமைப்புகளை உருவாக்கியது. அதன் பிறகு கர்நாடகம் சார்பில் கடந்த 23-ந் தேதி 2 பிரதிநிதிகளின் பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் சாதக-பாதகங்கள் மற்றும் சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க 30-ந் தேதி(இன்று) கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதன்படி கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் நடக்கிறது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், காவிரி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். 

Next Story