சொத்துவரி, மனைகள் வரன்முறை: மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள்


சொத்துவரி, மனைகள் வரன்முறை: மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள்
x
தினத்தந்தி 30 Jun 2018 9:00 PM GMT (Updated: 30 Jun 2018 2:59 PM GMT)

நெல்லை மாநகராட்சி சார்பில் சொத்துவரி, மனைகள் வரன்முறை போன்றவற்றுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சி சார்பில் சொத்துவரி, மனைகள் வரன்முறை போன்றவற்றுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

சிறப்பு முகாம்கள் 

நெல்லை மாநகராட்சி பகுதியில் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு கண்டு ஆணைகள் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. சொத்துவரி பெயர் மாற்றம், காலி மனை வரிவிதிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு அனுமதி, கட்டிட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்துதல் போன்ற கோப்புகளுக்கு தீர்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்படுகின்றன.

இதற்கான முகாம் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் வருகிற 3–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதே போல் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் 6–ந்தேதியும், நெல்லை சந்திப்பில் உள்ள தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் 10–ந்தேதியும், நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நெல்லை மண்டல அலுவலகத்தில் 13–ந்தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

வரிவசூல் மையம் 

பொது மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி நிலுவை மற்றும் நடப்பு விண்ணப்பங்களின் மீதான ஆணையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் முகாம் நாட்களில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் மற்றும் இதர வரிகளையும் செலுத்த வரிவசூல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முகாம் மூலம் பொது மக்கள் பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Next Story