தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது முறைகேட்டுக்கு வழிவகுக்கும் கார்த்திக் எம்.எல்.ஏ. பேட்டி
தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் வினியோக திட்டத்தை செயல்படுத்துவது முறைகேட்டுக்கு வழிவகுக்கும் என்று நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கூறினார்.
கோவை,
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. தளபதி ரத்த தானம் இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் பீளமேடு பாலன் நகரில் நடந்தது. இதை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, நிர்வாகிகள் நாச்சிமுத்து, நா. முருகவேல், எஸ்.எம்.சாமி, நந்தகுமார், உமாமகேஸ்வரி, வக்கீல் கே.எம்.தண்டபானி, அருள்மொழி, கார்த்திக் செல்வராஜ், கோட்டை அப்பாஸ், கோவிந்தசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
கோவை மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க கடந்த 2008–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது, மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான திட்ட வரையறைகள் தயார் செய்யப்பட்டன. இதற்காக மத்திய–மாநில அரசுகளிடம் நிதி பெற கடந்த 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் 8 வருட காலதாமதத்திற்கு பிறகு, 24 மணிநேர குடிநீர் வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிநீர் வழங்குவதற்காக பிரான்சு நிறுவனத்தை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு பராமரிப்பு பணிகளை கொடுத்துள்ளனர். இதன்மூலம், ஒரு வருடம் அவர்கள் திட்டமிடவும், 4 ஆண்டுகள் அதற்கான பணிகளை மேற்கொள்ளவும், 21 ஆண்டுகள் பராமரிப்பிற்காகவும், மொத்தம் 26 ஆண்டுகள் பணிக்காக ரூ.3,150 கோடியை வழங்கியுள்ளனர்.
இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க. செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மாநகராட்சியையும், அரசையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் இல்லாத நிலையில் தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது முறைகேட்டுக்கு வழி வகுக்கும். ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், அதன் மதிப்பிற்கு தகுந்தவாறு விவாதித்து அனுமதி பெற வேண்டும் என்பது மரபு. இதற்கிடையே, மாநகராட்சியினுள் சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகளும், கவுண்டம்பாளையம் தொகுதியில் ஒரு சில பகுதிகளும் உள்ளடங்கியுள்ளது. இப்படி இருக்க சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் கூட அனுமதி பெறவில்லை.
எனவே குடிநீர் வினியோக உரிமையை தனியாருக்கு வழங்கிய மாநகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 6–ந் தேதி கோவை தெற்கு தாசிலதார் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தி.மு.க.வினர் ஏராளமான பேர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கோவை 57–வது வட்டம் பாரதி நகரில் கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி மற்றும் விவசாய தொழிலாளர்கள் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மனோகர் தலைமை தாங்கினார். பீளமேடு பகுதி பொறுப்பாளர் வெ.கோவிந்தராஜ் வரவேற்றார். சிவக்குமரன், சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முடிவில் மாநகர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேஸ் வரன் நன்றி கூறினார்.