தஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு 21-ந் தேதி தொடங்குகிறது


தஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு 21-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 1 July 2018 4:00 AM IST (Updated: 1 July 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மருத்துவகல்லூரி சாலை கணபதிநகரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் அடுத்தமாதம்(ஜூலை) 21-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. திருமணம் ஆகாத இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 1998-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதிக்கும், 2002-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எந்த வகையிலும் வயது தளர்வு கிடையாது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களும், ஆங்கிலப்பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். உயிரியியல் பாடப்பிரிவு கட்டாயம் இடம் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும். 1.6 கிலோமீட்டர் தூரத்தை 6 நிமிடங்கள் 30 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும். 1 நிமிடத்திற்குள் 10 முறை உடல் தள்ளும் திறன், 1 நிமிடத்திற்குள் 10 முறை உட்கார்ந்து எழுதல் போன்ற உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும்.

குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீட்டர் ஆகும். உடல் எடை அளவு உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நல்ல உடல்நிலை உடையவராகவும், எவ்வித தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். பார்வை திறன்(தூரப்பார்வை) 6/36 என்ற அளவில் இரு கண்களும் பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும். உடலில் பச்சை குத்தியிருந்தால் விண்ணப்பதாரர் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார். மேலும் விவரங்களுக்கு www.ai-r-m-e-ns-e-l-e-ct-i-on.gov.in மற்றும் www.ai-r-m-e-ns-e-l-e-ct-i-on.cd-ac.in ஆகிய இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story