ஆசை வார்த்தை கூறி பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது


ஆசை வார்த்தை கூறி பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-07-01T01:37:54+05:30)

திருக்கோவிலூர் அருகே ஆசை வார்த்தை கூறி பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள டெட் நகரை சேர்ந்தவர் முனுசாமி மகன் அன்பரசன் (வயது 33). இவரும் ஒதியத்தூரை சேர்ந்த 28 வயது பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அன்பரசன் அந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் கர்ப்பிணியானார். இதையடுத்து அந்த பெண் அன்பரசனிடம் சென்று தான் கர்ப்பிணியாக உள்ளதால், தன்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது அன்பரசன் பழச்சாற்றில் கருக்கலைப்பு மாத்திரை கலந்து அந்த பெண்ணுக்கு கொடுத்து கருவை கலைத்தார். அதன் பின்னர் மீண்டும் அந்த பெண் அன்பரசனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர், தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அதை தடுக்க முயன்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனர்.


Next Story