வரி பாக்கி பட்டியலில் இடம்பெற்ற அரசியல் பிரமுகர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? பா.ஜ.க. கேள்வி
வரி பாக்கி வைத்துள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து பா.ஜ.க. கேள்வி விடுத்துள்ளது.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வருகிற 9–ந்தேதி நடக்கிறது. கூட்டத்துக்கு தேசிய தலைவர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் புதுவை மாநில நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம்.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் யுத்திகள், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
புதுவையில் கடந்த 2 வாரங்களில் கவர்னரின் நடவடிக்கை காரணமாக மின்கட்டண பாக்கி ரூ.50 கோடி வசூலாகி உள்ளது. தற்போது சொத்துவரி செலுத்தாதவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியினரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே அமைச்சர் கமலக்கண்ணனும் தேர்தலின்போது அதிக அளவில் செலவு செய்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சாதாரண மக்கள் இதுபோல் வரிபாக்கி வைத்திருந்தால் நடவடிக்கை பாய்கிறது. ஆனால் அரசியல் கட்சியினர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது தெரியவில்லை.
பொதுப்பணித்துறையில் பல ஒப்பந்ததாரர்களுக்கு செய்த பணிக்கு இன்னும் பணம் வழங்கப்படவில்லை. அதேபோல் பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட காய்கறி உள்ளிட்ட பொருட்களுக்கும் பட்டுவாடா செய்யப்படவில்லை.
புதுவை அரசு ரூ.1000 கோடி வரை கடனாக வைத்துள்ளது. அந்த கடனை திருப்பி செலுத்துவது எப்போது? இப்போது பட்ஜெட் போடப்பட உள்ள நிலையில் பாக்கித் தொகையை செலுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். புதுவையில் உள்ள பல ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் ஜி.எஸ்.டி.யை செலுத்துவதில்லை. 2 விதமான பில்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். இதில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.