வெறிநாய் கடித்து குதறியதில் 24 ஆடுகள் சாவு பொதுமக்கள் அச்சம்


வெறிநாய் கடித்து குதறியதில் 24 ஆடுகள் சாவு பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 30 Jun 2018 10:45 PM GMT (Updated: 30 Jun 2018 9:19 PM GMT)

க.பரமத்தி அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 24 ஆடுகள் இறந்தன. நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள குளத்தூர்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 40-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு, மாலையில் அவற்றை பட்டியில் அடைத்து வைத்து விட்டு தனது வீட்டுக்கு பாலகிருஷ்ணன் சென்றார்.

நேற்று காலை அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது பட்டிக்குள் 8 குட்டிகள் உள்பட 24 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும் 6 ஆடுகள் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடின.

இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன், பவுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி அழகிரி, பவுத்திரம் கால்நடை மருத்துவர் காளிமுத்து ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து பார்த்தனர். பின்னர் படுகாயத்துடன் கிடந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

பின்னர் இறந்த ஆடுகளை அவர் பரிசோதித்தபோது, வெறி நாய் கடித்து குதறியதில் அவை இறந்தது தெரியவந்தது. இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுத்தார். வெறிநாய் கடித்து ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆடுகளை கடித்து குதறிய வெறிநாயை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படாததால், அந்த நாய் பொதுமக்களையும் கடித்து குதறலாம் என குளத்தூர்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நாய் பிடிக்கும் வாகனத்தின் உதவியுடன், வெறிநாயை விரைவில் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் கேட்பாரற்று சுற்றித்திரியும் நாய்களையும் பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story