ரவுடிக்கு அரிவாள் வெட்டு: கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடிக்கு அரிவாள் வெட்டு: கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Jun 2018 10:15 PM GMT (Updated: 30 Jun 2018 9:20 PM GMT)

நாமக்கல்லில் ரவுடியை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் காசி என்கிற காசிராஜன் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளியே வந்த காசிராஜனை கடந்த மே மாதம் 11-ந் தேதி மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இந்த கொலை முயற்சி வழக்கில் நாமக்கல் ரெட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்த மனோ என்கிற மனோகரன் (வயது 23), ஆர்.பி.புதூரை சேர்ந்த கிருஷ்ணகாந்த் (23), எம்.ஜி.ஆர்.நகர் சீனிவாசன் (24), வீசாணம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி குமார் (26) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் போலீசாரால் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாமக்கல் வ.உ.சி.நகரை சேர்ந்த வீரா என்கிற வீரகுமார் (32) நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

கைதான வீரா என்கிற வீரகுமார், குமார் மற்றும் கிருஷ்ணகாந்த் ஆகிய 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஆசியா மரியம் வீரா என்கிற வீரகுமார் உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 3 பேரிடமும் நாமக்கல் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். 

Next Story