பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது


பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 30 Jun 2018 11:00 PM GMT (Updated: 30 Jun 2018 9:21 PM GMT)

பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை,

காரைக்குடி-திருவாரூர் இடையே இருந்த மீட்டர்கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றத்திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இந்த வழியாக 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. முதல் கட்டமாக காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான 73.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த பணி முடிவடைந்துவிட்டது.

ரெயில் போக்குவரத்துக்கு ஏற்ப ரெயில் பாதை இருக்கிறதா? என கண்டறியவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 27, 28 ஆகிய தேதிகளிலும், மார்ச் மாதம் 1-ந் தேதியும் ரெயில்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இந்த பாதையில் இயக்கலாம் என்று சான்று அளிக்கப்பட்டது.

பின்னர் ஏப்ரல் மாதம் ஒரு நாள் மட்டும் காரைக்கால்- பட்டுக்கோட்டை இடையே ரெயில் இயக்கப்பட்டது. பின்னர் ரெயில் பெட்டிகள் இல்லை என்று கூறி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி ஆகிய பகுதியை சேர்ந்த ரெயில் உபயோகிப்பாளர்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தினர். இவர்களின் கோரிக்கையை ஏற்று காரைக்குடி-பட்டுக்கோட்டைக்கு இடையே நேற்று ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

காலை 6.15 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரெயில், காலை 11.45 மணிக்கு பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இது குறித்து ரெயில்வே அதிகாரி சுரேஷ் குமார் கூறும்போது, காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே இயக்கப்படும் ரெயில், வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும். இந்த நிலை 3 மாதங்கள் மட்டும் நீடிக்கும். அதன் பின்னர் தினமும் ரெயில் இயக்கப் படும் என்றார்.

காரைக்குடியில் இருந்து புறப்பட்ட ரெயில், பட்டுக்கோட்டைக்கு வந்தவுடன் பட்டுக்கோட்டை தாலுகா ரெயில் பயணிகள் நலச் சங்க தலைவர் ஜெயராமன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் வீராசாமி மற்றும் ரெயில் பயணிகள், பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்துரெயில் பணிகள் நலச் சங்க தலைவர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காலை 6.15 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.45 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வந்துள்ளது. ரெயில்வே கேட்டுகளில் ஆட்கள் நியமிக்கப்படாததால் ஆங்காங்கே ரெயில் நிறுத்தப்பட்டு, தாமதமாக வந்துள்ளது. வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் இந்த ரெயிலை இயக்க வேண்டும். ரெயில் பெட்டிகளில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் பெண்கள், நோயாளிகள் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும். பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையே அகல ரெயில் பாதை பணிகளை துரிதப் படுத்த வேண்டும் என்று கூறினார். 

Next Story