ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை
x
தினத்தந்தி 30 Jun 2018 11:15 PM GMT (Updated: 30 Jun 2018 9:21 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்து சேர்ந்ததை அடுத்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக நேற்று அதிகரித்தது. இதையொட்டி அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

பென்னாகரம்,

தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதன் காரணமாக அந்த 2 அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த 2 அணைகளில் இருந்தும் கடந்த 28-ந் தேதி வினாடிக்கு 28 ஆயிரத்து 880 கனஅடி வீதமும், நேற்று முன்தினம் வினாடிக்கு 25 ஆயிரத்து 556 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று காலையில் வந்தடைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலை 5 மணி நிலவரப்படி இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து அதிகரித்துள்ளதை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கரைபுரண்டோடி ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது.

இதன்காரணமாக நேற்று ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் அருவி மற்றும் ஐந்தருவியில் மீண்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மேலும் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமலும், பரிசல் சவாரி செய்ய முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் ஒகேனக்கல் அருவிகள், காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை உற்சாகமாக கண்டுரசித்தனர். சுற்றுலா பயணிகளில் சிலர் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரங்களில் குளித்து மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்லை கடந்து காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த தண்ணீர் நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. முன்னதாக மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 57.11 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,553 கனஅடி என்ற அளவில் இருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 1,414 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இரவில் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் இன்று சற்று வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. 

Next Story