சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் - பெங்களூருவில் இன்று நடக்கிறது


சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் - பெங்களூருவில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 1 July 2018 4:15 AM IST (Updated: 1 July 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் நியமிக்கப்பட்டனர். கூட்டணி ஆட்சி சுமுகமாக நடைபெற வசதியாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. குழுவின் முதல் கூட்டத்தில் இருகட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் ஒருங்கிணைத்து ஒரு பொது செயல் திட்டத்தை வகுக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த பொது செயல் திட்டத்தை வகுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர், ஒரு பொது செயல் திட்டத்தை வகுத்துள்ளனர். பட்ஜெட் தாக்கல் தொடர்பாக சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்று சித்தராமையா பேசியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் 2-வது கூட்டம் பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக் கிழமை) பகல் 3 மணிக்கு குமாரகிருபா விருந்தினர் மாளிகையில் நடக்கிறது.

ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், ஜனதா தளம்(எஸ்) பொதுச் செயலாளர் டேனிஷ்அலி, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு ஒருங்கிணைப்பு குழு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் பொது செயல் திட்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story