கூடலூர் பகுதியில் ரசாயனம் தெளித்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கூடலூர் பகுதியில் ரசாயனம் தெளித்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 2 July 2018 4:30 AM IST (Updated: 2 July 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ரசாயனம் தெளித்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் கூடலூர் பகுதியிலும் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்,

கேரள மாநில கடலில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திராவில் இருந்து அதிகளவு மீன்கள் கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த வாரம் கேரள மாநில எல்லையில் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வரப்படும் மீன்கள் பல நாட்கள் கெடாமல் இருக்க பார்மாலின் என்ற ரசாயனத்தை தெளித்து இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து பல டன் மீன்களை கேரள சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோல் கூடலூர் அருகே சுல்தான்பத்தேரியிலும் ரசாயனம் தெளித்து விற்பனைக்கு வைத்திருந்த 1 டன் மீன்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து கேரள அதிகாரிகள் கூறியதாவது:–

இறந்தவர்களின் உடல்கள் கெடாமல் பாதுகாத்து வைக்க பார்மாலின் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை பயன்படுத்தி மீன்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் பல நாட்கள் அவைகள் கெடாமல் கடலில் பிடித்தது போல் பளபள என காணப்படும்.

இந்த ரசாயனம் கலந்த மீன்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு புற்றுநோய், ஹோர்மோன் பிரச்சினை உள்பட பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மீன்களை வாங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே கேரள மாநிலம் கோழிக்கோடு, கொண்டோட்டி மொத்த மார்க்கெட்டுகளில் இருந்து தினமும் லாரிகளில் மீன்கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் மக்கள் சாப்பிடும் வகையில் தரமான மீன்களாக உள்ளதா? என தெரிய வில்லை. மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உரிய கண்காணிப்பு மேற்கொள்வது இல்லை என பொதுமக்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது–

கேரளாவில் இருந்து கூடலூர் பகுதிக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. மீன்பிடி தடைக்கால நேரங்களில் கூடலூருக்கு மீன் வரத்து குறைவாக இருக்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக அதிகளவு மீன்கள் கூடலூருக்கு வருகிறது. மேலும் மீன்களை வாங்கி சமைத்தால் கடும் தூர்நாற்றமும் வருகிறது.

இதனால் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்காணிப்பது இல்லை. இதேபோல் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களும் விற்கப்படுகிறது. ரசாயன உணவு பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story