குன்னூர் அருகே என்ஜின் கோளாறு ஏற்பட்டு மலைரெயில் வழியில் நின்றது
குன்னூர் அருகே என்ஜின் கோளாறு ஏற்பட்டு மலைரெயில் வழியில் நின்றது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
குன்னூர்,
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கும் மற்றும் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்படுகிறது. காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் மலை ரெயில் பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் 4 பெட்டிகளுடன்காலை 10.15 மணிக்கு குன்னூரை அடைந்து அதன் பின்னர் டீசல் என்ஜின் மூலம் 5 பெட்டிகளுடன் 11.30 மணிக்கு ஊட்டியை அடைகிறது. அதன் பின்னர் 1.45 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்படும் மலைரெயில் மதியம் 2.45 மணிக்கு குன்னூரை அடைகிறது.
குன்னூரில் பர்னஸ் ஆயில் என்ஜின் பொருத்தப்பட்டு 4 பெட்டிகளுடன் மாலை 3.15 மணிக்குமேட்டுப்பாளையம் செல்கிறது. இந்த நிலையில் நேற்று மலை ரெயில் வழக்கம் போல மாலை 3.15 மணிக்கு சுமார் 80 பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது. ரெயில் காட்டேரி மற்றும் ரன்னி மேடு ரயில் நிலையம் இடையே சென்ற போது திடீரென்று என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில் நிறுத்தப்பட்டு என்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ரெயிவே ஊழியர்கள் மேற்கொண்டனர். இந்த முயற்சி தோல்வியில் முடியவே ரெயில் குன்னூர் ரயில் நிலையம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால் காட்டேரி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது ரெயில் நகராமல் நின்று விட்டது.
இதனை தொடர்ந்து ரெயில் பயணிகள் அரசு பஸ்சில் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர். வழக்கமாக மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் போது தான் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு ரயில் தாமதமாக வரும். ஆனால் நேற்று மேட்டுப்பாளையம் செல்லும் ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்ப்பட்டு ரெயில் பாதி வழியில் நின்றது பயணிகளை மிகவும் அவதிப்பட வைத்தது. இதனால் பயணிகள் பஸ்பிடித்து மேட்டுப்பாளையம் சென்றனர்.