ஆன்லைன் லாட்டரி விற்பனை கும்பல் கைது: ‘வாடகைக்கு வீடு பிடித்து ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்தோம்’ கைதானவர்கள் வாக்குமூலம்
வாடகைக்கு வீடுபிடித்து ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்து ஆன்லைன் லாட்டரி நடத்தினோம் என்று கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
கோவை,
கோவையில் லாட்டரி விற்பனை செய்யும் கும்பல் கேரளாவில் நடைபெறும் லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைன் மூலம் பெற்று வருகிறார்கள். பின்னர் பரிசு விழும் லாட்டரி சீட்டுகளின் கடைசி 3 நம்பருக்கு ரூ.25 ஆயிரமும், அதற்கு அடுத்த 2 நம்பருக்கு ரூ.10 ஆயிரமும், கடைசி ஒரு நம்பருக்கு ரூ.100 என்று அறிவித்து, ஒரு டிக்கெட் ரூ.60 வீதம் ஏராளமான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறார்கள்.
கோவை மாச்சம்பாளையம் எஸ்.பி. டவர் அருகே உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் லாட்டரி கும்பல் தங்கி இருப்பதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன் மேற்பார்வையில், போத்தனூர் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், காசிபாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஆன்லைன் லாட்டரி விற்பனை கும்பல் போலீசிடம் பிடிபட்டது. குறிச்சியை சேர்ந்த சஞ்சய்காந்தி (வயது 34), சிவச்சந்திரன் (36), வினோத்குமார் (23) ஆகியோர் கைதானார்கள். இவர்களிடம் இருந்து ரூ.22 லட்சத்து 65 ஆயிரம், 4 மடிக்கணினிகள், 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் லாட்டரி குலுக்கல் விவரங்கள், பணம் வசூல் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
சொந்த கட்டிடத்தில் ஆன்லைன் லாட்டரி நடத்தினால் பிடிபட்டு விடுவோம் என்பதற்காக வாடகைக்கு வீடு பிடித்து கடந்த 6 மாதங்களாக ஆன்லைன் லாட்டரி நடத்தினோம். இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூலானது. அடிக்கடி இடத்தையும் மாற்றிக்கொண்டே இருப்போம். இருந்தாலும் வாடிக்கையாளர்கள் போலீசில் அளித்த தகவலின் பேரில் சிக்கிக்கொண்டோம். கோவையில் இதுபோன்று பல இடங்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனையை பலர் நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இவர்கள் அளித்த தகவலின் பேரில் நகரில் வேறு இடங்களில் இதுபோன்று லாட்டரி விற்பனை கும்பல் செயல்படுகிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 60 ரூபாய் டிக்கெட்டுகளை ஏராளமான அளவிற்கு விற்பனை செய்வது, குறைந்த அளவு பரிசுத்தொகையை வழங்குவது ஆகியவற்றினால் இந்த கும்பலுக்கு லட்சக்கணக்கில் லாபம் கிடைத்துள்ளது. இதுபோன்ற பல கும்பல்கள் ஆன்லைன் லாட்டரியை கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் நடத்துவதால் தொழிலாளர்கள் பலர் பணத்தை இழப்பது அதிகரித்து வருகிறது. எனவே இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.