எடப்பாடி, கவர்னர் நடத்தும் இரட்டை ஆட்சியால் தமிழகத்தின் மாநில உரிமைகள் பறிபோகும் நிலை உள்ளது


எடப்பாடி, கவர்னர் நடத்தும் இரட்டை ஆட்சியால் தமிழகத்தின் மாநில உரிமைகள் பறிபோகும் நிலை உள்ளது
x
தினத்தந்தி 2 July 2018 4:45 AM IST (Updated: 2 July 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி, கவர்னர் நடத்தும் இரட்டை ஆட்சியால் தமிழகத்தின் மாநில உரிமைகள் பறிபோகும் நிலை உள்ளது என்று திருச்சி திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

அன்பில் தர்மலிங்கத்தின் மகள் வழிப்பேரனும், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளருமான இ.கார்த்திகேயன்-வந்தனா திருமணம் நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமண விழாவுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. எந்த லட்சியத்திற்காக பாடுபட்டு வருகிறதோ அந்த லட்சியம் நிறைவேற அன்பில் தர்மலிங்கம் தனது இறுதிகாலம் வரை பணியாற்றினார். அதேபோல் அவரது மகனும், எனது ஆருயிர் நண்பருமான அன்பில் பொய்யாமொழி எனக்கு எந்த அளவுக்கு துணை நின்றார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். எனக்கு பொய்யாமொழி துணையாக இருந்ததை போல், இப்போது எனது மகன் உதய நிதிக்கு பொய்யாமொழியின் மகன் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதுணையாக இருந்து வருகிறார். இப்படி வாழையடி வாழையாக அன்பில் குடும்பத்துக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் நீண்டகால நட்பு, பாசம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே இது அன்பில் இல்ல திருமணம் என்பதை விட, நமது இல்ல திருமணம் என்பதே சரியானதாகும்.

தமிழகத்தில் இன்று எடப்பாடி தலைமையில் ஒரு ஆட்சியும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கவர்னர் தலைமையில் மற்றொரு ஆட்சியும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த இரட்டை ஆட்சியில் மாநில உரிமைகள் பறிபோகும் நிலை தான் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி எப்போது வரும் என மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்தாலும், அதைவிட இந்த ஆட்சி எப்போது அகற்றப்படும், எப்போது ஒழிக்கப்படும் என்பதில் தான் அதிக ஆவலாக உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தமிழக மக்களைப்பற்றி கிஞ்சிற்றும் கவலை இல்லை. காவிரி நீர் பிரச்சினை தீர்ந்து விட்டதாக அ.தி.மு.க.வினர் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். சட்டமன்றத்தில் அமைச்சர்கள் உள்பட உறுப்பினர்கள், முதல்-அமைச்சரை புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் உண்மையான நிலை என்ன? காவிரி நீர் பிரச்சினை முழுமையாக தீர்ந்து விட்டதா? என்றால் இல்லை. மூச்சு விடும் அளவிற்கு ஒரு கால அவகாசம் கிடைத்து இருக்கிறது அவ்வளவு தான்.

காவிரி மேலாண்மை வாரியம் என சொல்லி, இப்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதனை கூட கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி ஏற்றுக்கொள்ள மறுத்து நீதி, நியாயம் கேட்க உச்ச நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்யப்போவதாக கூறி இருக்கிறார். அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதில் தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? காவிரி நீர் பிரச்சினை பற்றியோ, நீட் தேர்வு பற்றியோ, சேலம் எட்டு வழி சாலையால் மக்கள் பாதிக்கப்படுவது பற்றியோ, தூத்துக்குடியில் நடந்த கொடுமையான சம்பவம் பற்றியோ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவலை இல்லை. அவரது கவலை எல்லாம் இந்த ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொண்டால் கோடி, கோடியாக கொள்ளை அடிக்க முடியும் என்பதில் மட்டுமே இருக்கிறது. எனவே இந்த ஆட்சியை அகற்றுவதற்கான உணர்வுப்பூர்வமான உறுதியை இந்த மணவிழாவில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, டி.எஸ்.டி.இளங்கோவன் உள்ளிட்ட அன்பில் குடும்பத்தினர் விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றனர். 

Next Story