பாம்பன் ரெயில்வே பாலத்தில் புதிய தூக்குப்பாலம் கட்ட ரூ.35 கோடி ஒதுக்கீடு, பணிகள் தொடங்கப்படாத அவலம்
பாம்பன் ரெயில்வே பாலத்தில் புதிய தூக்குப்பாலம் கட்ட ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டும், பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் பாலத்தை திறந்து மூட முடியாமல் தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அது போல் இந்த பாலத்தின் மைய பகுதி கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. அதன்படி கப்பல்கள், பெரிய படகுகள் வந்தால், இந்த பாலத்தை கடந்து செல்வதற்காக, ரெயில்வே பணியாளர்கள் மூலம் தூக்குப்பாலம் திறக்கப்படுகிறது. பாலத்தின் இரு இணைப்புகளிலும் மொத்தம் 16 பேர் மூலம் திறக்கப்பட்டு, கப்பல்கள் கடந்து சென்ற பின்பு அவர்கள் மூலமே மூடப்பட்டு வருகின்றது.
பாம்பன் ரெயில்வே பாலம் அகலபாதையாக மாற்றப்பட்ட போது அதிக பெட்டிகளுடன் ரெயில்கள் செல்லும் போது அதன் எடையை தாங்கும் வகையில், தூக்குப்பாலத்தில் சுமார் 100 டன்னுக்கு மேல் எடை அதிகரிக்கப்பட்டது. பழமையான தூக்குப்பாலத்தில் தற்போது, பல மடங்கு எடை அதிகரிக்கப்பட்டதால், கப்பல்கள் கடந்து செல்ல வரும் போது தூக்குப் பாலத்தை திறந்து மூட முடியாமல் தொழிலாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து பாம்பன் ரெயில்வே பாலத்தின் மைய பகுதியில் மனித கரங்களால் திறந்து மூடப்படும் தூக்குப் பாலத்தை அகற்றி விட்டு, மின்மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் ஒரே இணைப்பில் புதிய தூக்குப் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ரெயில்வே துறை மூலம் ரூ.35 கோடி நிதி ஒதுக்கி சுமார் 4 மாதங்களுக்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் புதிய தூக்குப் பாலம் கட்டுவதற் கான எந்த ஒரு முன்னேற்பாடும் பணிகளும் நடைபெறவில்லை.
இதற்கான காரணங்கள் என்ன என்பதும் தெரியவில்லை. கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே தூக்குப் பாலம் உப்புக்காற்றால் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக 6 மாதத்திற்கு ஒரு முறை அலுமினிய பெயிண்ட் அடிப்பதும் வழக்கம். ஆனால் தூக்குப்பாலத்தில் பல மாதங்களாகியும் பெயிண்ட் அடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பாலம் பல இடங்களில் துருப்பிடித்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
எனவே பெரிய அசம்பாவிதம் நடைபெறும் முன்பு புதிய தூக்குப் பாலம் கட்டும் பணிகளை விரைந்து தொடங்க ரெயில்வேதுறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.