பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது, மத்திய மந்திரி பேச்சு

பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என ராமேசுவரம் வந்த மத்திய மந்திரி கூறினார்.
ராமேசுவரம்,
மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன்சிங் நேற்று மாலை ராமேசுவரம் வந்தார். முன்னதாக அவர் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாமின் நினைவு மண்டபத்திற்கு சென்றார். அங்கு மாவட்ட கலெக்டர் நடராஜன், அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம், நினைவு மண்டப பொறுப்பாளர் அன்பழகன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் வரவேற்றனர். அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய அவர் அப்துல் கலாமின் நினைவு மண்டபம் முழுவதையும் பார்வையிட்டார்.
பிறகு ஹயாத் ஓட்டலுக்கு சென்ற மத்திய அமைச்சரை சோளந்தூர் மற்றும் 72 கண்மாய்களின் பாசன சங்க தலைவர் பாலகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து உதவிகளும் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்.
மத்திய மந்திரி சிறிது ஓய்விற்கு பின் கோசாமி மடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. மாவட்ட ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:–
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்க்கை தரத்தை நினைத்து ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்தை தமிழகத்தில் முதன்முறையாக பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படகுக்கும் மத்திய அரசு ரூ.40 லட்சம் மானியமாக வழங்குகிறது. இதற்கு முந்தைய அரசு அப்போதே இந்த திட்டத்தை கொண்டு வந்திருந்தால் எப்போதோ மீனவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கும். இந்தியாவில் 74 சதவீத வீடுகளில் கழிப்பறை ஏற்படுத்தப்பட்டுஉள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவ பெண்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கடல் பாசி வளர்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் போது மத்திய வேளாண்மைத்துறை இணை மந்திரி புருஷோத்தம ரூபாலா, பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் சுப.நாகராஜன், வக்கீல் குப்புராம், மாவட்ட செயலாளர் ஆத்ம கார்த்திக், நகர தலைவர் ஸ்ரீதர் உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.
பின்னர் அப்துல் கலாமின் அண்ணன் வீட்டிற்கு சென்ற மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன்சிங்கை அங்கிருந்த முகமது முத்துமீரா லெப்பை மரைக்காயர், அவரது மகன் ஜெய்னுலாதீன், மகள் நசீமா மரைக்காயர் ஆகியோர் வரவேற்றனர். அவர்களை நலம் விசாரித்த மத்திய மந்திரி பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க புத்தகத்தை வழங்கினார். மத்திய மந்திரிக்கும் நினைவு புத்தக பரிசு வழங்கப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) காலை ராமேசுவரத்தில் மீன்படி மற்றும் விவசாயம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன்சிங் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற நிலைக்குழுவைச் சேர்ந்த 16 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.