விருத்தாசலம் அருகே கழுத்தை அறுத்து விவசாயி கொலை, தொழிலாளி வெறிச்செயல்
விருத்தாசலம் அருகே கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் முருகையன் (வயது 37). விவசாயி. இவருடைய மனைவி அனிதா(32). இவர்களுக்கு அமுதா(17) என்ற மகளும், அமுதராஜ்(13), அமல்ராஜ்(5) என்று 2 மகன்களும் உள்ளனர். இவரது வீட்டுக்கு எதிரே பல்வேறு அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்கள் உள்ளன. இங்கு கட்டப்பட்டுள்ள திண்ணையில், முருகையன் தூங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்ட முருகையன், பின்னர் வழக்கம் போல் எதிரே உள்ள திண்ணையில் சென்று படுத்து தூங்கினார். நேற்று காலை, நீண்ட நேரமாகியும் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து வரவில்லை.
இதையடுத்து அனிதா அருகே சென்று பார்த்த போது, முருகையன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர் கதறி அழுதார். சம்பவம் பற்றி அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன் தலைமையில விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிளிமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி முருகன் (40) என்பவர் முருகையன் இரவில் தூங்கும் அதே இடத்தில் வந்து தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது முருகையனுக்கு பிடிக்கவில்லை. இதனால் முருகனிடம் எங்கள் ஊருக்கு நீ எதற்காக வருகிறாய் என்று கேட்டு அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு முருகையன் தூங்க சென்ற போது அங்கு முருகன் இல்லை. இதனால் அவர் தூங்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு முருகையன் அவருடைய இடத்தில் வழக்கம் போல் தூங்கிவிட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு முருகன் அங்கு வந்த போது, அவர் வழக்கமாக தூங்கும் இடத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அவர் தூங்குவதற்கு இடம் இல்லாமல் போனது.
எனவே முருகையன் மீது அவர் கோபத்தில் இருந்துள்ளார். நள்ளிரவில் அந்த பகுதியில் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி முருகையனின் கழுத்தை முருகன் தான் வைத்திருந்த கத்தியால் அறுத்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம், கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே முருகையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.