ஆலங்குடியில் கொட்டி தீர்த்த கனமழை சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி


ஆலங்குடியில் கொட்டி தீர்த்த கனமழை சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 July 2018 4:15 AM IST (Updated: 2 July 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடியில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள ஆண்டிக்குளம் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதுமான அடிப்படை வசிகள் இல்லை. தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேலாக இப்பகுதியில் மழை பெய்யாததால் வறட்சி நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அதே பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், யோகேஸ்வரன், சின்னத்தம்பி, வெள்ளையன், தில்லைக் கண்ணு ஆகியோரது வீடுகளின் சுற்றுச்சுவர்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் புகுந்தது. மேலும் ஆலங்குடி அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. இந்த கன மழையால் பள்ளியின் சுற்றுச் சுவர்களும் உடைந்து சேதம் அடைந்தது. தெருக்களில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தாசில்தார் ரெத்தினவதி, வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இப்பகுதியில் தேங்கி நின்ற மழைநீர் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற மழைநீரை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “நேற்று முன்தினம் பெய்த மழையால் வீட்டிற்குள் பூச்சிகள், தேள், பாம்பு, பூரான் வண்டுகள் ஆகியவை தண்ணீரில் மிதந்து வந்தது. இதனால் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்தோம். இதனால் ஆண்டிக்குளம் பகுதிக்கு மழைநீர் வடிகால் வசதியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக்கூறினர். 

Next Story