வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் திடீர் தீ விபத்து


வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 2 July 2018 4:13 AM IST (Updated: 2 July 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் எந்திரங்கள் சேதம் அடைந்தன.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே செம்மாண்டம்பாளையம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மச்சுவீட்டு தோட்டத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை 2 ஷிப்டுகளாக இயக்கப்படுகிறது. பகல் ஷிப்டில் 10 தொழிலாளர்களும், இரவு ஷிப்டில் 10 தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பகல் பொழுதில் வேலை பார்த்த தொழிலாளர்கள் வேலை முடிந்து சென்று விட்டனர். அதை தொடர்ந்து இரவு ஷிப்ட் தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது நூற்பாலையின் ஒரு பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த தீயணைப்பு சாதனைங்களை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. அதற்குள் தீ மளமள வென்று நூற்பாலை முழுவதும் பரவியது. இதனால் அலறியடித்துக்கொண்டு தொழிலாளர்கள் வெளியே ஓடிவந்தனர்.

பின்னர் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் மில்லில் இருந்த எந்திரங்கள் மற்றும் பருத்தி பஞ்சுகள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் நூற்பாலை கட்டிடமும் சேதம் அடைந்தது.

தீப்பிடித்தற்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மின்கசிவின் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், பஞ்சுகள் எரிந்து சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story