நாகர்கோவிலில் ரெயில் மறியல் செய்ய முயன்ற 119 பேர் கைது


நாகர்கோவிலில் ரெயில் மறியல் செய்ய முயன்ற 119 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 4:30 AM IST (Updated: 2 July 2018 10:30 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ரெயில் மறியல் செய்ய முயன்ற பெண்கள் உள்பட 119 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் ஒரு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்திய பின்புதான் குற்றவாளி மீதுவழக்கு பதிவு செய்ய வேண்டும். குற்றவாளி அரசு ஊழியராக இருந்தால் அவரை கைது செய்யும் முன் துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த தீர்ப்பு வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச் செய்துவிடும் என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செல்லாததாக்க உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஜூலை 2–ந் தேதி (அதாவது நேற்று) நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி ரெயில் மறியல் போராட்டத்துக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக ஆதிவாசிகள் மகா சபை, அம்பேத்கர் பாசறை, திராவிடர் தமிழர் கட்சி, குமரி மாவட்ட தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று காலை கோட்டார் கம்பளம் சந்திப்பில் திரளாக கூடி போராட்ட விளக்க கூட்டம் நடத்தினர்.

பின்னர் அனைவரும் சேர்ந்து ரெயிலை மறித்து போராட்டம் செய்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமையில், கோட்டார் ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். கட்சி மற்றும் அமைப்புகளின் கொடிகளை கையில் பிடித்தபடியும், கண்டன கோ‌ஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக சென்றனர்.

ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி கோட்டார் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, இன்ஸ்பெக்டர்கள் சாய்லட்சுமி, சாந்தகுமாரி, பெர்னார்டு சேவியர், அருள்ஜாண் ஒய்ஸ்லின்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ், மோகனஅய்யர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரெயில் மறியல் செய்ய முயற்சித்து பேரணியாக வந்தவர்களை ரெயில் நிலையம் முன் உள்ள ரவுண்டானா அருகே போலீசார் தடுத்தனர்.இதனால் அனைவரும் திடீரென ரெயில்வே ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 11 பெண்கள் உள்பட மொத்தம் 119 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து அனைவரையும் போலீஸ் வானத்தில் ஏற்றி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story