தஞ்சையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்-திவாகரன் திடீர் சந்திப்பு


தஞ்சையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்-திவாகரன் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 2 July 2018 11:44 PM GMT (Updated: 2 July 2018 11:44 PM GMT)

தஞ்சையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்- திவாகரன் திடீரென சந்தித்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் இல்ல திருமண விழா தஞ்சையில் நேற்று நடந்தது. விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த விழாவில் அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன் பங்கேற்றார்.

திவாகரன், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார். மேடை நிகழ்ச்சி முடிந்த பிறகு மு.க.ஸ்டாலின் மேடையில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் திருமண மண்டபத்தை விட்டு வெளியே செல்லும் முன்பு திவாகரன் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்ற ஸ்டாலின், அவரிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து சில வினாடிகள் அவருடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு அவரிடம் விடைபெற்றுச் சென்றார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் திவாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலினுடன் திட்டமிட்ட சந்திப்பு எல்லாம் கிடையாது. பெண் வீடு எனக்கு சொந்தம். எனக்கு வந்த அழைப்பிதழில் ஸ்டாலின் பெயர் இல்லை. குடும்ப பத்திரிகை தான் வந்திருந்தது. இங்கு வந்து பார்த்தபோதுதான் மேடையில் நான் ஸ்டாலினை பார்த்தேன். என்னிடம் அவர் நலம் விசாரித்தார். நானும் அவரிடம் நலம் விசாரித்தேன். சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசு விடாப்பிடியாக செயல்படுவது ஏன்? என்று தெரியவில்லை. இந்த திட்டம் நல்லது தான். ஆனால் மக்கள் கருத்தை கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசியதாக இங்கே குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் விவசாய நிலம் பாதிக்கப்படும். நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.

போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவது முறையற்ற செயல். முதல்-அமைச்சரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலீஸ் அதிகாரிகள் இப்படி செயல்படுகிறார்கள். இதை முதல்-அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும்.

அண்ணா திராவிடர் கழகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்து ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். மீனவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோர கிராமங்களில் நாளை(புதன்கிழமை) மனிதசங்கிலி போராட்டம் நடக்கிறது. அதில் எனது மகன் ஜெயானந்த் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story