வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரி எழும்பூரில் ரெயில் மறியல் போராட்டம்


வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரி எழும்பூரில் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 3 July 2018 7:13 AM IST (Updated: 3 July 2018 7:13 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரியும், அச்சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டக்காரர்கள் திடீரென கோஷமிட்டுக்கொண்டே எழும்பூர் ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர். அங்கு 5-வது நடைமேடையில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட தயாராக இருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து அதன்முன் அமர்ந்தனர். சிலர் கட்சி கொடிகளுடன் ரெயில் என்ஜினில் ஏறியும் கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தாம்பரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பீம்ராவ் தலைமையில் நடந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தேவஅருள் பிரகாசம், தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறப்பட தயாராக இருந்த மின்சார ரெயிலை மறித்து போராடியவர்களை பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Next Story