திருவொற்றியூரில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது


திருவொற்றியூரில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 7:18 AM IST (Updated: 3 July 2018 7:18 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கிராமத் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 45). தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரு கிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் அப்பர்சாமி கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் மோகனை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மோகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

இது குறித்து திருவொற்றியூர் போலீசில் மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோகனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியை சேர்ந்த சதீஷ் (25), பிரசாத் (24), வினோத்குமார் (23) என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, மோகனிடம் இருந்து பறித்து சென்ற செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அவர்கள் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவமாக மாதவரத்தை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் பாலமுருகன் (40), திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் அருகே நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சேட்டு (22) என்பவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்றார்.

இது தொடர்பாக பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும் ஏற்கனவே ஏராளமான வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story