பாளையங்கோட்டையில் கொள்ளை முயற்சி: நிதி நிறுவன உதவி மேலாளர் கைது


பாளையங்கோட்டையில் கொள்ளை முயற்சி: நிதி நிறுவன உதவி மேலாளர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 7:31 AM IST (Updated: 3 July 2018 7:31 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நிதி நிறுவன உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை,

பாளையங்கோட்டை நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் தொடர்புடைய அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் தங்க நகைகள் அடகு மற்றும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கடந்த 30-ந் தேதி மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் நிதிநிறுவன ஊழியர்களை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஊழியர்கள் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து மர்ம நபர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். அப்போது வெளியே தயார் நிலையில் நின்றிருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிடிபட்ட 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தச்சநல்லூர் தளவாய்புரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 46), வடக்கு பாலபாக்யா நகரை சேர்ந்த மீனாட்சி ராஜன் என்ற மீனாராஜ் (38) என்பது தெரியவந்தது. அவர்கள் நிதி நிறுவனத்தில் உள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து வெளியூருக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கொள்ளையை அரங்கேற்றுவதற்கு நிதி நிறுவனத்தில் வேலை செய்தவரே திட்டம் போட்டு கொடுத்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அந்த நிதி நிறுவனத்தில் நெல்லை சந்திப்பு துவரை ஆபீசு கைலாசபுரம் தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி (30) என்பவர் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மீனாராஜிம் மற்றொரு நிதி நிறுவனத்தில் வேலை செய்த போது அவருடன் குருசாமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மீனாராஜிடம், கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு குருசாமி பணம் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்தவும், மேலும் கொள்ளையில் கூடுதலாக கிடைக்கும் பணத்தை பங்கு போட்டு கொள்ளவும் குருசாமி, மீனாராஜ் ஆகியோர் திட்டம் போட்டு உள்ளனர். நிதி நிறுவனத்துக்கு எந்த நேரத்தில் வரவேண்டும், அங்கு நகை, பணம் எங்கே உள்ளது, எப்படி கொள்ளையை அரங்கேற்ற வேண்டும் என்று குருசாமி திட்டம் வகுத்து கொடுத்து உள்ளார். இந்த விவரம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குருசாமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதவிர சம்பவத்தின் போது நிதிநிறுவனத்துக்கு வெளியே தயார் நிலையில் நின்றிருந்தவர் மீனாராஜின் தம்பி டிரைவர் ஆனந்தராஜ் என்பது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story