கும்பலால் அடித்து கொல்லப்பட்ட 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி - முதல்மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு


கும்பலால் அடித்து கொல்லப்பட்ட 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி - முதல்மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 July 2018 9:55 AM IST (Updated: 3 July 2018 9:55 AM IST)
t-max-icont-min-icon

கும்பலால் அடித்து கொல்லப்பட்ட 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்மந்திரி பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

மும்பை,

துலே மாவட்டம் ரெயின்படா கிராமத்தில் நேற்று முன்தினம் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 5 பேர் பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 23 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் முதல்-மந்திரி பட்னாவிஸ் இது குறித்து கூறியதாவது:-

வதந்தியின் பேரில் 5 பேர் அடித்து கொல்லப்பட்டது கொடூரமானது. இது மிகவும் காயப்படுத்துகிற ஒரு சம்பவமாகும். போலீசார் இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மக்கள் சட்டத்தை தங்களது கையில் எடுப்பது எந்த சூழலிலும் தவறானது. வதந்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறுவதை தடுக்க முயற்சிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக நேற்று முன்தினம் கிராமமக்கள் 15 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 23 பேரை கைது செய்தனர்.

இது குறித்து துலே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம்குமார் கூறுகையில், ‘5 பேர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் இதுவரையில் கிராம மக்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.

இந்தநிலையில் டெல்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆகிர், துலே சம்பவத்துக்கு தனது கண்டனங்களை தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ‘துலே சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி பட்னாவிசுடன் பேசினேன். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது’ என தெரிவித்தார்.

இதற்கிடையே பா.ஜனதா அரசின் திறமையின்மை காரணமாகவே துலேயில் 5 பேர் அடித்து கொல்லப்பட நேர்ந்ததாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், ஏற்கனவே ஜல்காவ் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் வதந்தியை நம்பி பா.ஜனதா எம்.எல்.ஏ. தலைமையிலான சிலர் ஒரு கும்பல் மீது தாக்குதல் நடத்தி இருப்பதை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார்.

Next Story