கல்லூரிச்சூழல் கலகலப்பாக இருக்க...


கல்லூரிச்சூழல் கலகலப்பாக இருக்க...
x
தினத்தந்தி 3 July 2018 1:07 PM IST (Updated: 3 July 2018 1:07 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரிக்கு வந்த முதல் நாளிலேயே கத்தியும் கையுமாக பிடிபட்டனர் சில கல்லூரி மாணவர்கள்.

மாறுவேஷத்தில் இருப்பதுபோல மாணவர் தோற்றமே இல்லாமல் காணப்பட்ட சிலருக்கு காவல் நிலையத்திலேயே சிகை அலங்காரம் செய்யப்பட்டது. மகிழ்ச்சியான கல்லூரி வளாகம், கோஷ்டி மோதலுக்கான கொலோசிய அரங்கமா? என கேள்விகேட்க வைத்தது மாணவர்களின் இந்த நடவடிக்கைகள்.கல்லூரிச் சூழலைமகிழ்ச்சியாக எதிர்கொள்ள மாணவர்களுக்கு தேவையான சில பண்புகளைபற்றி பார்ப்போம்....

* மோதலுக்கு வழி வகுக்கும் ‘ராக்கிங்’ போன்ற நிகழ்வுகளை தடைசெய்ய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதன்முதலாக கல்லூரியில் நுழையும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ‘ராக்கிங்’ பிரச்சினைகளே குழு சேரவும், மோதல் உருவாகவும் காரணங்களாக இருக்கின்றன என்பது கண்கூடு. தாங்கள் மூத்த மாணவர்களால் கேலி, கிண்டல், வற்புறுத்தல்களில் ஈடுபடுத்தப்படும்போது இளம் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்ய வேண்டும். அதை நிர்வாகத்தினர் முறையாக கையாண்டு, இளம் மாணவர்களின் மகிழ்ச்சியான கல்லூரி வாழ்க்கைக்கு அடிகோல வேண்டும். மூத்த மாணவர்கள், இளையவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர வேடிக்கை என்ற பெயரில் வன்முறையை வளர்க்க காரணமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

* கால்பந்து, தடகளம், கிரிக்கெட் எனஉங்களுக்கு பிரியமானவிளையாட்டில் பங்கெடுங்கள். ஆனால் அதில் தோல்வி ஏற்பட்டால் துவண்டுபோக வேண்டாம். விளையாட்டுகள் நட்புறவுக்கும், மனவலிமை வளர்ப்பதற்குமே தவிர, மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்ல. அதுபோலவே பாடங்களிலும் எதிர்பார்த்ததுபோல மதிப்பெண்கள் எடுக்க முடியாவிட்டால், அடுத்த முறை முயற்சிக்க வேண்டுமேதவிர சோர்ந்துபோகவோ, தவறான முடிவுக்குச் செல்லவோ கூடாது.

* நல்லநண்பர்களை தேர்ந்தெடுத்துப்பழகுங்கள். புறம்பேசுபவர்கள், கெட்ட பழக்கம் உள்ளவர்கள், தீய செயல்களில் ஈடுபட தூண்டுபவர்கள் ஆகியோரிடம் இருந்து விலகி இருங்கள். நல்ல நட்பு வட்டாரம் கல்லூரி காலத்தை வாழ்க்கையின் பசுமையான பகுதியாக மாற்றுவார்கள்.

* விருப்பமுள்ள பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பதும்மகிழ்ச்சியாக படிக்க துணை செய்யும். இது பற்றி ஆரம்பத்திலேயே பெற்றோரிடம் பேசிவிடுங்கள்.

* கல்லூரி என்றால் படிப்பு மட்டுமே கதியல்ல. வேடிக்கையும் இருந்தால்தான் சோர்வின்றி படிக்க முடியும். எனவே அவ்வப்போது வெளியே சென்று வாருங்கள். நண்பர்களுடன் உரையாடுங்கள். விளையாடுங்கள். உணவு விடுதிகள்,சினிமாவுக்கு சென்றுதிரும்பலாம்.

* யோகா, தியானம், உடற்பயிற்சி இவற்றை கடைப்பிடித்து உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாக வைப்பது உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்கும்.

* சரியான உணவும், போதிய ஓய்வும் அவசியம். மாலையில் கல்லூரி முடிந்ததும் சிறிது நேரம் விளையாட்டு, சிறிது நேரம் படிப்பு, சிறிது அரட்டையென்று இருந்துவிட்டு, நன்றாகச் சாப்பிடுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச்செல்லுங்கள்.படுக்கைக்கு சென்றபிறகு போனை நோண்டிக் கொண்டிருக்க வேண்டாம். நல்ல ஓய்வுதான் நாளைய செயல்பாட்டிற்கான பேட்டரி சார்ஜ் என்பதை நினைவில் வையுங்கள்.

* வீட்டைப் பிரிந்து கல்லூரி வளாகத்திலே தங்கி படிப்பவர்கள்பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் நடைபெறும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். தேவையான உதவிகளை கேட்டுப் பெற வேண்டும். இது எதிர்பாராத மனக்கசப்பு நிகழ்வுகளை மறந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள துணையாக இருக்கும்.

* இறுதியாக ஒன்று மன்னிப்பு கேட்கும் நல்ல பழக்கத்தை வளர்ப்பது. போட்டி, பொறாமைகள், தவறான பேச்சுகள், தவறான யூகங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நண்பர்களுடனும், மற்றவர்களுடனும் மனக்கசப்புகள் ஏற்படலாம். அதுபோன்ற நேரங்களில் தங்கள் நடத்தைகளை சீர்தூக்கிப் பார்த்து சுய பரிசோதனைசெய்வது அவசியம். தவறு நேரும்போது மன்னிப்பு கேட்கவும், மன்னிப்பு கொடுக்கவும் பழக வேண்டும். 

Next Story