இடி-மின்னலுடன் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன


இடி-மின்னலுடன் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 4 July 2018 4:30 AM IST (Updated: 4 July 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் இடி-மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை, பாபநாசம், போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு 12 மணி வரை சுமார் 4 மணி நேரம் இடி- மின்னலுடன் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இதில் அதிகபட்சமாக கும்பகோணத்தில் 73 மி.மீட்டராக மழை அளவு பதிவானது. கும்பகோணம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், தாராசுரம், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பம்புசெட் மூலம் முன்பட்ட குறுவை நடவுசெய்யப்பட்டு தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த மழை காரணமாக அறுவடைக்கு தயாரான சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் அப்படியே சாய்ந்தன. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் நெல்மணிகள் ஈரமாகியுள்ளது. சுவாமிமலை பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்து தற்போது பஞ்சுகளை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மழை காரணமாக பஞ்சுகள் ஈரமாகி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்த போது பலத்த காற்றும் வீசியதால் கும்பகோணம் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள மரத்தின் பெரிய கிளை முறிந்து அருகே இருந்த மின்கம்பியில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் மரக்கிளையை அகற்றி மின்கம்பிகளை சீரமைத்தனர்.

கும்பகோணம் பகுதியில் சில இடங்களில் தற்போது பம்புசெட் மூலம் தற்போது குறுவை சாகுபடி தொடங்கி உள்ளது. இந்த பயிர்களுக்கு நேற்று முன்தினம் பெய்த மழை பயனுள்ளதாக அமைந்திருந்தது. 

Next Story