ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: ‘‘மக்களை மூளைச்சலவை செய்ததாக கூறுவது திசை திருப்பும் முயற்சி" திருமாவளவன் பேட்டி


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: ‘‘மக்களை மூளைச்சலவை செய்ததாக கூறுவது திசை திருப்பும் முயற்சி திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 4 July 2018 2:30 AM IST (Updated: 4 July 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

‘‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மக்களை மூளைச்சலவை செய்ததாக கூறுவது திசை திருப்பும் முயற்சி“ என திருமாவளவன் கூறினார்.

தூத்துக்குடி,

‘‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மக்களை மூளைச்சலவை செய்ததாக கூறுவது திசை திருப்பும் முயற்சி“ என திருமாவளவன் கூறினார்.

இழப்பீடு

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும். இந்த ஆலைக்கு இந்தியாவில் எந்த மூலையிலும் மீண்டும் அனுமதி வழங்க கூடாது. போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை பல்வேறு அமைப்புகள் எழுப்பி உள்ளன. அந்த கோரிக்கைகள் இன்னும் அப்படியே உள்ளன.

பசுமைச்சாலை

பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 17–ந் தேதி திருவண்ணாமலையிலும், 20–ந் தேதி சேலத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை வேகமாக மக்கள் மீது திணிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள் கருத்தை அறிந்து ஒப்புதல் பெற்று இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

நாளை(அதாவது இன்று) நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் இடதுசாரி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். பழங்குடியினருக்கு அரசு தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும். பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தாட்கோ மூலம் தொழில் முனைவோருக்காக அளிக்கப்பட்ட கடன்களை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

கலை, அறிவியல் படிப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது. ஆகையால் கூடுதலாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய முடிவு செய்து 2 இடங்களில் கட்டிடங்களை கட்டி உள்ளது. ஆனால் சென்னை பாரிமுனையில் உள்ள கல்லூரியை மூட வேண்டும் என்ற முயற்சி தேவையற்றது. அதில் இடவசதி இல்லை என்பதால் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது.

மருத்துவ கலந்தாய்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று பொதுப்பிரிவில் இடம்பெற வேண்டிய ஆதிதிராவிடர் மாணவர்களை ஒதுக்கீடு பிரிவிலேயே சேர்ப்பது மாணவர்களுக்கு செய்யும் துரோகம். இந்த அநாகரீகத்தை அரசு கடைபிடிக்க கூடாது.

திசை திருப்பும் முயற்சி

தூத்துக்குடியில் கலவரத்தை நடத்தியது ஸ்டெர்லைட் நிர்வாகமும், போலீசும் தான். மக்கள் அல்லது மக்களுக்காக போராடுகிற அமைப்புகள் யாரும் வன்முறைக்கு காரணம் இல்லை. ஆய்வு முடிந்த பிறகு உண்மை வெளிவரும். போராட்டத்தில் லட்சம் பேர் பங்கேற்று உள்னர். லட்சம் பேருக்கு மூளைச்சலவை செய்ய முடியாது. நியாயமான கோரிக்கைக்காக மக்கள் போராடினார்கள். அந்த கோரிக்கை தவறு என்றால், மூளைச்சலவை செய்தார்கள் என்று கூறலாம். இது ஒரு திசைதிருப்பும் முயற்சி. ஆலை நிர்வாகம், போலீஸ் சேர்ந்து பரப்புகிற ஒரு அவதூறு, வதந்தி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story