ஏரியில் மிதந்த ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


ஏரியில் மிதந்த ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 July 2018 4:00 AM IST (Updated: 4 July 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் அருகே ஏரியில் ஆண் பிணம் மிதந்தது. அவர் யார்? கொலை செய்து வீசப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெண்ணந்தூர்,

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டிபட்டி கிராமத்தில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதப்பதாக வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெண்ணந்தூர் போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 2 அல்லது 3 நாட்கள் ஆகியிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஏரியில் மீன் பிடிக்க பல ஆண்டுகளாக குத்தகை ஏலம் விடப்படவில்லை. இதனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் இந்த ஏரிக்கு வந்து மீன் பிடித்து செல்வது வழக்கம்.

அதுபோல் இவர் மீன் பிடிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது இவரை கொலை செய்து, ஏரியில் பிணத்தை வீசிச் சென்றார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story