‘தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும்’ தஞ்சையில், கவிஞர் வைரமுத்து பேட்டி


‘தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும்’ தஞ்சையில், கவிஞர் வைரமுத்து பேட்டி
x
தினத்தந்தி 5 July 2018 4:30 AM IST (Updated: 5 July 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

‘தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும்’ என்று தஞ்சையில் கவிஞர் வைரமுத்து கூறினார்.

தஞ்சாவூர்,

வெற்றி தமிழர் பேரவை தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும்

இந்தியா என்றால் இரண்டு மொழிகளின் கலாசாரத்தால் ஆனது என்பது அறிவியல் அறிஞர்களின் முடிவு. தெற்கே தமிழ், வடக்கே சமஸ்கிருதம். இந்தியாவின் இரண்டு கண்கள் என்று தமிழையும், சமஸ்கிருதத்தையும் அறிஞர்கள் சொல்கிறார்கள். சமஸ்கிருதம் இன்றைக்கு வாழும் மொழி என்று சொல்ல முடியாது. இரண்டு மொழிகளில் வாழத்தக்க மொழி, வசிக்கத்தக்க மொழி தமிழ். தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும் என அவர்கள் உணர வேண்டும். தமிழை சேர்த்து தான் இந்தியா.

தமிழ் இருந்தால் தான், இந்தியாவின் முழு முகம் தெரியும் என்பதை அறிஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இணையவழிக்கு மாத்திரம் அல்ல. எந்த வழிக்கும் இந்தியாவின் ஒருமைப்பாடு தமிழை கழித்து விடக்கூடாது. தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் ஒருமைப்பாடு. தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் நாகரீகம். இதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.

நதிக்கரையில் நாகரீகம் பிறந்தது என்பது பழைய கூற்று. ஆனால் நதிக்கரையில் நாகரீகம் அழிய தொடங்குவது என்பது ஆபத்து. தண்ணீர் தான் மூன்றாம் உலகப்போருக்கு மூல காரணமாக இருக்க போகிறது என்பது கூற்று. அந்த கூற்று இந்தியாவில் தொடங்கி விடக் கூடாது என்பது தான் கவலையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story