காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) இடையே 2:1 விகிதத்தில் வாரிய, கழக பதவிகள் பங்கீடு பட்ஜெட் கூட்டத்துக்கு பிறகு தலைவர்கள் நியமனம்
காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) இடையே 2:1 என்ற விகிதத்தில் வாரிய, கழக பதவிகள் பங்கீடு செய்யப்பட்டு உள்ளன.
பெங்களூரு,
காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) இடையே 2:1 என்ற விகிதத்தில் வாரிய, கழக பதவிகள் பங்கீடு செய்யப்பட்டு உள்ளன. பட்ஜெட் கூட்டத்துக்கு பிறகு அதற்கான தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கூட்டணி ஆட்சிகர்நாடகத்தில், காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. முதல்–மந்திரியாக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி இருக்கிறார். மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
இதில் காங்கிரஸ் சார்பில் 15 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் 11 எம்.எல்.ஏ.க்களும் மந்திரிகளாக செயல்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் சார்பில் 7 பேரும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் ஒருவரும் விரைவில் மந்திரியாக பொறுப்பு ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் உள்ள வாரியங்கள் மற்றும் கழகங்களை பங்கீட்டு கொள்வதில் காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
வாரிய–கழக பதவிகள் பங்கீடுஇந்த நிலையில், வாரியம்–கழகங்களை காங்கிரஸ்–ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் 2:1 என்ற விகிதத்தில் பங்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, முதற்கட்டமாக 30 வாரியம்–கழகங்கள் பங்கீடு செய்யப்பட்டு உள்ளன. கர்நாடக மாநில குடிசை மாற்று மேம்பாட்டு வாரியம், கர்நாடக வனதொழில் வாரியம், பெங்களூரு வளர்ச்சி வாரியம், பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம், கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், தேவராஜ் அர்ஸ் மேம்பாட்டு வாரியம், அம்பேத்கர் மேம்பாட்டு வாரியம், வால்மீகி மேம்பாட்டு வாரியம், வக்பு வாரியம், சிறுபான்மையினர் மேம்பாட்டு வாரியம் மற்றும் ஹட்டி தங்க கனிம நிறுவனம் உள்பட மேலும் சில வாரியம்–கழகங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல், பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி., கர்நாடக மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு வாரியம், கர்நாடக வனவிடுதி வாரியம், கர்நாடக பட்டு தொழில் மேம்பாட்டு வாரியம், கர்நாடக கைத்தறி மேம்பாட்டு வாரியம் மற்றும் கர்நாடக சிறுதொழில் மேம்பாட்டு வாரியம் உள்பட மேலும் சில வாரியம்–கழகங்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
கடும் போட்டிஇதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ் மற்றும் எம்.டி.பி. நாகராஜ் ஆகியோர் இடையே கர்நாடக குடிசை மாற்று மேம்பாட்டு வாரியம் மற்றும் பெங்களூரு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றின் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேபோல், பிற வாரியம்–கழகங்களின் தலைவர் பொறுப்புகளை கைப்பற்றுவதில் ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே தீவிர போட்டி உள்ளது. ஆனாலும், வாரியம்–கழகங்களுக்கான தலைவர்கள் பட்ஜெட் கூட்டத்துக்கு பிறகு இருகட்சிகளும் நியமிக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.