புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி,

துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடு நாளை (வெள்ளிக்கிழமை) காலை புதுவை வருகிறார். காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் வெங்கையாநாயுடு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். லாஸ்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

புதுவைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வரும் வெங்கையா நாயுடுவை வரவேற்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வெங்கையாநாயுடு வருகையை முன்னிட்டு புதுவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதுவை பல்கலைக்கழகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விழா நடைபெற உள்ள கருத்தரங்கு கூடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதேபோல் நகர பகுதியில் அரசு விழா நடைபெறும் கம்பன் கலையரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு செய்து அங்கு தங்கியுள்ளவர்களின் விவரங்களை சேகரித்தனர். மேலும் நகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

துணை ஜனாதிபதியின் இந்த சுற்றுப்பயணத்தின்போது அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சந்தித்து மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளனர். 

Next Story