கல்லால் முகத்தை சிதைத்து லாரி டிரைவர் படுகொலை ஜாமீனில் வந்த மறுநாளே தீர்த்துக்கட்டினர்


கல்லால் முகத்தை சிதைத்து லாரி டிரைவர் படுகொலை ஜாமீனில் வந்த மறுநாளே தீர்த்துக்கட்டினர்
x
தினத்தந்தி 6 July 2018 4:30 AM IST (Updated: 6 July 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடைய லாரி டிரைவர், கல்லால் முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்டார். ஜாமீனில் வந்த மறுநாளே தீர்த்துக்கட்டினர்.

ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த வெள்ளைக்கல்பட்டியை சேர்ந்தவர் ஆண்டவர்(வயது 44). லாரி டிரைவரான இவர், மோட்டார் சைக்கிள்கள், லாரி உள்ளிட்ட வாகன திருட்டில் தொடர்புடையவர். இவர் மீது ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் வசித்து வந்த ஆண்டவர், தற்போது மண்ணச்சநல்லூருக்கு சென்று விட்டார். ஆனால் அவ்வப்போது ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து நண்பர்களுடன் சுற்றி திரிவது வழக்கம்.

இந்தநிலையில் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஆண்டவர், கடந்த 3-ந் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு அவர் நேற்று முன்தினம் இரவு மேலூர் பகுதியில் நண்பர்களுடன் சுற்றி திரிந்துள்ளார். நேற்று காலை அவர் மேலூர் வடக்குதெருவில் உள்ள காலிமனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்து இருந்தனர். அவரது உடல் அருகே ரத்தக்கறையுடன் கூடிய சவுக்கு கட்டையும் கிடந்தது.

தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் நிஷா, ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். குடிபோதையில் நண்பர்களுக்குள் இடையே ஏற்பட்ட மோதலில் அவரை சவுக்கு கட்டையால் அடித்தும், தலையில் கல்லை போட்டும் 4-ந் தேதி இரவே கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது. ஆனால் இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாய் அர்ஜூன் மோப்பம் பிடித்து விட்டு அந்த பகுதியை சுற்றி, சுற்றி வந்தது. பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று ஒரு வீட்டின் அருகே நின்றது. பின்னர் அந்த வீட்டின் திண்ணையில் படுத்துக்கொண்டது. உடனே போலீசார் அந்த வீட்டில் உள்ளவர்களை விசாரிக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அந்த வீட்டில் இருந்த சிலர் தான் நேற்று முன்தினம் இரவு ஆண்டவருடன் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இரவோடு, இரவாக வீட்டை பூட்டிவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஆண்டவர், கூட்டாளிகளுடன் சேர்ந்த திருடிய வாகனங்களை விற்று அந்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கினால் கொலைக்கான காரணம் தெரிந்துவிடும். 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story