பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 6 July 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் குணசேகர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பல மாவட்டங்களில் எவ்வித விளக்கமும் கோராமல் ஊழியர்களை பணியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவது, விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுரு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தனி நபர் இல்ல கழிவறை கட்டுவதற்கு ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பஞ்சாபிகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை கடந்த 3-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன், மாவட்ட செயலாளர் குமரி ஆனந்தன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அறிவழகன் நன்றி கூறினார். 

Next Story